35.திருப்புகழ் 33.திலதைப்பதி
maragadham.blogspot.in
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 32வது தலம் திலதைப்பதி. திலதர்ப்பணபுரி திலதைப்பதியாகி இன்று செதலபதி என்ற பெயரில் வழங்கி வருகிறது. பேரளம்-பூந்தோட்டம் அருகில் உள்ளது. ராம-லக்ஷ்மணர்கள் தம் தந்தையாகிய தசரதருக்கும் தந்தையையொத்த ஜடாயுவுக்கும் தில தர்ப்பணம் செய்த இடம் என்பது ஸ்தல புராணம். கோயிலின் பெயர் 'மதிமுத்தம்'. கோயில் இருக்கும் இடத்தின் பெயர் ' கோவில்பத்து' ' என்பதாகும்.
ஸ்வாமியின் பெயர் முக்தீஶ்வரர், மந்தாரவனேஶ்வரர். அம்பாள் பெயர் ஸ்வர்ணவல்லி, பொற்கொடிநாயகி.
இது சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
விண்ணர் வேதம் விரித்தோத வல்லார் ஒரு பாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்துஅருள்பேண நின்றம் மதிமுத்தமே
மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேல்
கந்தமாரும் கடற்காழி யுளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே
maragadham.blogspot.in. Thanks.
இங்கு வந்த அருணகிரிநாதர் மூன்று பாடல்கள் பாடுகிறார்.
மறையத் தனைமா சிறைசாலை
வழியுய்த் துயர்வா னுறுதேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே
இறையத்தனையோ அதுதானும்
இலையிட் டுணலேய் தருகாலம்
அறையிற் பெரிதா மலமாயை
அலையப் படுமா றினியோமோ
வேதம் கற்ற ப்ரம்மனை பெரிய சிறைக்குப் போகும்படிச் செய்து,
உயர்ந்த வானுலக தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே !
திலதைப்பதித் தலத்தில் வாழ்கின்ற பெருமாளே !
மற்றவர்களுக்கு உணவிட்டபின் நாம் உண்ணுதல் என்ற நியதி அணுவளவேனும் என்னிடத்தில் இல்லை; சொல்வதானால், அந்த நெறியை விட்டகாலம் தான் பெரிது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சலுறும் இத் தீ நெறி எனக்குக் கூடாது.
ப்ரம்மாவைச் சிறையிலடைத்தவர், தேவர்களை சிறையிலிருந்து விடுவித்தார் என்பது ரசமான இடம்.
சிற்றின்பப் பற்று அறவேண்டும் என்று ஒருபாடலில் வேண்டுகிறார்.
உலகோரின் புகழ் பாடாது உன் திருப்புகழே பாடவேண்டும் என்று ஒரு பாட்டில் வேண்டுகிறார்.
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து பிடிநாளிற்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து கையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த புதல்வோனே
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த பெருமாளே.
பொழுதிற் கரத்தொ டர்ந்து பிடிநாளிற்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து கையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த புதல்வோனே
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த பெருமாளே.
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து திரிவேனோ
புள்ளியையுடைய துதிக்கையுடைய யானை (யாகிய கஜேந்த்ரன்), தாமரை நிறைந்த குளத்தில் இறங்கியபோது, முதலை அவனைத் தொடர்ந்து பிடித்த அந்த நாளில்,
துன்புற்றுத் திகைத்து நின்று, வரதராம் திருமாலுக்கு அடைக்கலம் வேண்டி முறையீடு செய்ய, ஒரு க்ஷணப்பொழுதில் வந்து, தமது திருக்கையில் விளங்குகின்ற -
சக்கரப்படையை ஏவின அந்த வரதராஜப் பெருமாளுக்கு உடன்பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய குழந்தையே !
சிவ பக்தர்கள், முக்தர்கள், தேவர்கள், தவம் நிறைந்த சித்தர்கள் இவர்கள் மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி தலத்தில் மகிழும் பெருமாளே !
உலகினரின் புகழ்க்கூச்சல் என்னும் செருக்கு நீங்கி, ஞான உணர்ச்சியோடு, உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரியலாகாதா !
கஜேந்த்ர மோக்ஷ வரலாற்றை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் !
"புகர் கைக் கரி பொதிந்த முளரிக் குளத்து இழிந்த பொழுதில்
கரா தொடர்ந்து பிடி நாளில்,
பொருமித் திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத,
அக் கணத்து வந்து கையில் ஆரும்
திகிரிப் படை துரந்த வரதர் "
என்று பதம் பிரித்துக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்! கஜேந்த்ரனின் சரணாகதியையும், அதற்கு திருமால் அருளிய பாங்கையும் எவ்வளவு நன்றாகச் சொல்கிறார்! "வரதர் "என்று இருமுறை சொல்லி, பெருமாளின் கருணையைப் புகழ்கிறார். [ கஜேந்த்ர மோக்ஷத்தை காலையில் ஸ்மரிப்பது புண்ணீயம் என்பது பெரியோர் கொள்கை.] அருணகிரிநாதருக்கு இந்த பாகவத வரலாறு மிகவும் பிடித்தம் போலும்! பல இடங்களில் இதைப் பாடியிருக்கிறார்.
மதசிகரி கதறி முது முதலை கவர்தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒருவிசை ஆதிமூலமென
வரு கருணை வரதன்
என்று சீர் பாத வகுப்பில் பாடுகிறார். இங்கும் கருணை வரதன்! இத்தனைக்கும் கஜேந்த்ரன் "ஆதி மூலம் " என்றுதான் பொதுவாக அழைத்தான்! அதுவும் ஓருமுறைதான் ( ஒரு விசை) அழைத்தான்! திருமால் ஓடி வந்து விட்டார்! அது அல்லவோ கருணை!
பிற தெய்வங்களையும் மனதார, வாயாரப் புகழ்ந்து பாடும் பெரிய மனமும் அரிய வாக்கும் நம் ஸ்வாமிகளுக்கே உரியது.
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதி
என்ற இந்த வரி, சம்பந்தரின் பதிகத்தில் வரும் ஒரு பாடலின் கீழ்க்கண்ட வரியை நினைவூட்டுகிறது. அருணகிரிநாதர் சம்பந்தரின் பரம பக்தரல்லவா!
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
எத்தனை சுகமான பாடல்!
No comments:
Post a Comment