Friday, 27 January 2017

44.திருப்புகழ் 42.சிக்கல்


44.திருப்புகழ் 42.சிக்கல்



அருணகிரிநாதர்  செய்த தல யாத்திரையில் ஒரு விசேஷம். தனக்குப் பிடித்த ஒரு இடத்தில் சில நாள் தங்கிவிடுவார். பிறகு அங்கிருந்து கிளம்பி பக்கத்திலுள்ள தலங்களுக்குச் செல்வார். திருவண்ணாமலை - சிதம்பரம், சிதம்பரம் - சீர்காழி, சீர்காழி -திருவாரூர்  என இப்படித் தொடர்ந்தது இவர் யாத்திரை. இப்போது திருவாரூரிலிருந்து கிளம்பிவிட்டார். இங்கிருந்து முதலில் பார்த்த 41வது தலம் சிக்கல்.

சிக்கல் என்றதும் சிங்காரவேலவர் என்று  நினைவு வரும்! இது நவனீதேஶ்வரர் என்ற வெண்ணெய்நாதர்  என்ற திருநாமத்தில் சிவபிரான் அருள் பாலிக்கும் தலம். அம்பாள் பெயர்  சக்த்யாயதாக்ஷி, 
வேல் நெடுங்கண்ணி. வசிஷ்டர், விஶ்வாமித்ரர், காமதேனு, நாரதர், காத்யாயனர், முசுகுந்தச் சக்ரவர்த்தி ஆகியோர் தவம் செய்து பேறு பெற்ற இடம். இங்குதான் அம்பாள்  சூர சம்ஹாரம் செய்ய முருகனுக்கு வேல் கொடுத்ததாக ஐதீகம். 'சிக்கலில் வேல், செந்திலில் சம்ஹாரம் ' என்று சொல்வார்கள்.
இது சம்பந்தர் பாடல் பெற்ற தலம். 

வானு லாவுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை யாயின நையுமே.



வானுலாவும் மதி வந்துலவும் மதில் மாளிகை
 தேனுலாவும் மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமான் அடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே.


இப்படிப் பதம் பிரித்துக்கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்!


மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழும்மடி யாரவ ரல்ல லறுப்பரே.

நீல நெய்தனில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே.

இப்படி அருமையான பதிகம் 2ம் திருமுறையில் வருகிறது.




 நமது ஸ்வாமிகள் இங்கே இரண்டு அருமையான பாடல்கள் பாடுகிறார். இரண்டும் அருளை வேண்டுவதாக இருக்கின்றன.







வன்னி யொத்த படைக்க லாதிய
துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
மண்ணி லற்று விழச்செய் மாதவன்         மருகோனே

மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
மென்ன விட்டு முடுக்கு சூரனை
மல்லு டற்று முருட்டு மார்பற                    அடைவாகச்


சென்னி பற்றி யறுத்த கூரிய
 மின்னி ழைத்த திறத்த வேலவ
 செய்ய பொற்புன வெற்பு மானணை              மணிமார்பா

செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
 நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
 செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய                   பெருமாளே.

பெய்யு முத்தமிழிற்  தயாபர
என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்குரை செப்பு நாயக             அருள்தாராய்.



அக்னிக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலியவற்றைக்  கொண்ட  கைகள் உடைய அசுரர்களின்  பெரிய  தலைகள் பூமியில் அற்று விழும்படிச் செய்கின்ற திருமாலின் மருகனே !
படத்தைஉடைய பெரிய பாம்பினது விஷம்  என்று சொல்லும்படி வேலாயுதத்தைச் செலுத்தி, எதிர்த்துவந்த சூரனை மற்போர் செய்யும்  கரடுமுரடான அவனுடைய மார்பு பிளக்கவும்,
தக்க வகையில்  அவனுடைய தலையைச் சீவி, கூரிய மின்போல் ஒளிரும்  பராக்ரமம் வாய்ந்த  வேலாயுதத்தை உடையவனே ! அழகிய தினைப்புனமிருந்த மலையில் மான்போன்ற வள்ளியை அணைந்த அழகிய  மார்பனே!
செம்மை மனமுடைய பெரியோர்கள்,தவத்தில் மிக்கவர், ஆகியவர்களின்  நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்திலே விளங்கி நிற்கும் செல்வனே! சிக்கல் நகரில் விளங்கும் பெருமாளே !
முத்தமிழில் ஆசைகொண்டவனே என முக்தி நிலை அடைந்த பெரியோர்கள்போற்ற மகிழ்பவனே ! சிவபெருமானுக்கு உபதேசம் செய்யும் நாயகனே !அருள் செய்வாயாக !

செம்ம னத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
 செல்வ :


இறைவன் அடியார்கள் மனத்தாமரையில்  இருக்கிறான், இதை இன்னொரு இடத்திலும் சொல்கிறார்:

கொந்துவார்குர வடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவிலும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய  குரு நாதா.




குன்றாத வாழ்வு


இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
     சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
          இமயம கட்குச் சந்தான மாகிய                 முருகோனே

இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
          எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன்        மருகோனே


அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
          அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி           யிசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
          அசுரரை வெட்டிச் சங்கார மாடிய                 பெருமாளே.

புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
     ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
          பொருபுய திக்கெட் டும்போயு லாவிய           புகழாளா


பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
     லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
          பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய          கவிபாடி

விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
          வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு             மிடிதீர

மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
     சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையும்         அருள்வாயே




சிக்கல் சிங்காரவேலன்!



வெட்சிப்பூவாலாகிய விளங்கும் சிவந்த மாலையை அணிந்த மார்பும், புயமும் கொண்டவனே !
வில்லையொத்த புருவத்தையும், மை பூசிய கண்களையும், குங்குமப்பொட்டு திகழும் ஒளிவீசும் நெற்றியையும் கொண்ட ஹிமயகிரியின்  புத்ரியாகிய பார்வதிக்கு மைந்தனாகிய முருகனே !

இளையவளும் மலை நாட்டுப் பெண்ணுமாகிய வள்ளிக்கும், இந்த்ரன் பெற்ற ஒப்பற்றவளாகிய தேவசேனைக்கும் உரிய பரிசுத்த நாயகனே !
மேகத்தின் அழகைக்கொண்ட திருமேனியை உடைய திருமாலின் மருகனே!
மலர்கின்ற புஷ்பத்தின் வாசனையானது எட்டுத்திக்கிலும் முப்பத்தெட்டு காதம் வரை வீசுகின்ற அழகிய நந்தவனங்களில் சஞ்சரிக்கும்  வண்டின் இசையின் ஒலியால்
அழகுபெற்று விளங்கும் சிக்கல் தலத்தில் வீற்றிருக்கும் சிங்காரவேலனே ! போரிடையே மிகவும்  பொங்கிக் கொதிப்புடன் வந்த அசுரர்களை வெட்டிச் சங்கரித்த பெருமாளே !

'புலவர்களை  ஆதரித்து ரக்ஷிக்கும் கற்பக விருக்ஷமே ! இனிமைகொண்ட மாதர் கொங்கையில் ரமிக்கும்  புயத்தவனே ! திசை எட்டிலும் உலவும் புகழ் பெற்றவனே !நட்புத்தன்மை கூடிய சத்திய நிலையில் உனக்கு  ஒப்பானவர்கள் உண்டோ 'என்று சிறந்த சொற்களை  வரிசையாக வைத்து செவ்விய முறையில் அமைந்த பாடல்களைப் பாடி,
விலைமதிப்பற்ற தமிழ்ச்சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப்போன்ற கொடையாளிகள் யார்தான் இருக்கிறார்கள் என்று  மிகவும் கொண்டாடிப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற வெறியுள்ள லோபிகளிடம் போய் என் வருத்தங்களை முறையிடும் தரித்திர நிலை நீங்க -
மிக்க பிரயாசையுடன் உனது பாத தாமரைகளையே புகலிடம் எனப்பற்றியுள்ள பேதையாகிய என்மீது  நீ  அருளுறப் பார்த்து, குறைவில்லா வாழ்வைத் தந்தருள்வாயாக.

திருவேறு, தெள்ளியர் ஆதலும் வேறு என்றார் வள்ளுவர். நன்கு கற்றவர்கள், புலவர்கள்  லோபிகளை அடுத்தே, அவர்களைப் புகழ்ந்தே  வாழவேண்டிய நிலை தமிழ் நாட்டில் இருந்தது. அப்படிப் பாடியும் கொடாதவர்கள் இருந்திருக்கிறார்கள். இதை சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். தமிழை வைத்து தகுதியற்றவர்களைப் புகழ்ந்துபாடிப் பிழைக்கும் நிலை தனக்கு வரக்கூடாது என்று வேண்டுகிறார்.  இதைப் பிற இடங்களிலும் சொல்லியிருக்கிறார். 

வஞ்சக லோப மூடர் தம்பொருள் ஊர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது                          பலபாவின்

வண்புகழ் பாரி காரி என்றிசை வாதுகூறி
வந்தியர் போல வீணில்                       அழியாதே

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீபமாலை
திண்திறல் வேல்மயூர                          முகம் ஆறும்

செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறும்
செங்கனி வாயில் ஓர்சொல்                அருள்வாயே

இன்னொரு பாடல்:

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல் தண்
தமிழ்க்குத் தஞ்சமென்று                      உலகோரைத்
தவித்துச் சென்றிரந்து உளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரம்.



கந்தரநுபூதியில் பாடுகிறார்:

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
 இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
 
குரவா குமரா குலிசாயுத குஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடுகிறார் :


தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

இப்படி நம் திறமை எதுவாக இருந்தாலும் அதை தெய்வப் பணியில்  ஈடுபடுத்தவேண்டும். அதுவே  புண்ணியம். 

வெட்சி மலர். முருகனுக்குகந்தது..

No comments:

Post a Comment