Tuesday, 17 January 2017

29.திருப்புகழ். 27.ஆக்கூர்


29. திருப்புகழ். 27. ஆக்கூர்
http://holyindia.org

அருணகிரிநாதர்  மாயூரத்திலிருந்து  அடுத்து தரிசித்த தலம் (26 வது) ஆக்கூர்.  இது மாயூரத்திலிருந்து 10 மைல். இங்கு ஸ்வாமியின் பெயர் தான்தோன்றி யப்பர். அம்பாள் பெயர்  வல்நெடுங்கண்ணி.   இத்தலத்தைச்  சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கின்றனர்.











தான் தோன்றி மாடம் என இதை சம்பந்தர் குறிக்கிறார். இவர் பாடிய பதிகம் இரண்டாம் திருமுறையில் வருகிறது.













வாளார்கண் செந்துவர்வாய்  மாமலையான் தன்மடந்தை
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரின்  தான்தோன்றி மாடமே.

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியம் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர்  ஆக்கூரின் தான்தோன்றி மாடமே.

ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடம்சேர் தண்காழி
நாடற்கரிய சீர்ஞான சம்பந்தன் சொல்
பாடலிவை வல்லார்க்கு இல்லையாம் பாவமே.


[ இங்கு சம்பந்தரே இதைத் " தொல்கோயில் " என்று  சொல்வதால், இது எவ்வளவு தொன்மையானதாக இருக்கவேண்டும் என்பது தெரிகிறதல்லவா !]









ஆறாம் திருமுறையில் அப்பர் பாடிய பாடல்களில் இரண்டு:





முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி  நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி யப்ப  னாரே. 

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலும்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றர் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி  யப்ப னாரே.


இத்தலத்தைப் பாடவல்லார்க்கு பாவம் இல்லை என்கிறார் சம்பந்தர். 
தான்தோன்றி யப்பர்  கவலைதரும் பிறப்பாகிய துன்பத்திலிருந்து காப்பார் 
என்கிறார் அப்பர். எவ்வளவு மகிமை பொருந்திய தலம்! நாம்  அங்கு போகவியலாவிட்டாலும் இருந்த இடத்திலிருந்தே பாடலாமல்லவா !





சோமாஸ்கந்தர்
By http://picasaweb.google.com/injamaven. CC BY 3.0 creativecommons via Wikimedia Commons.


இத்தலத்தில் அருணகிரிநாதர்  ஓர் உருக்கமான பாடலைப் பாடியிருக்கிறார். துக்கத்திற்கு இடமானதும் அழியக்கூடியதுமான இந்த உடலினால், ஆராய்ச்சியின்றி வீண் வினைகளில் ஈடுபடுகிறோம். அதை விட்டு, முருகன் திருவடிகளைத் தொழவேண்டும் எனப் பாடுகிறார்.

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
     தூண்போன்ற இக்குடிலு        முலகூடே


சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
     தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே

வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
     வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல்

வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
     வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்


வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
     வான்தோன்று மற்றவரு ...... மடிபேண

மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
     வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்

தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
     சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா

தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
     தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.









இந்த உடலானது வினைகள் சூழ்ந்து துக்கத்திற்கு இடமாகிறது. நீரால் வளரும் தூண் போன்ற இந்த உடல், உலகில் தளர்ச்சியுற்று சாம்பலாகிவிடும்.

இதை நன்கு உணராமல்  நூல்களைப்  பயின்று பொருள்தேடும் முயற்சியில் ஈடுபடுகிறோம். இது, தங்கக் கலப்பையைக்கொண்டு வரகு விதைக்க உழுவதைப்போன்றது.
மனம் வேகும் தகைமையை ஒழித்து, வீண் வினைகளை ஒழித்து, நல்ல கதி கிடைக்கும் வண்ணம்  உனது திருவடிகளைத் தொழும் வண்ணம் அருள்வாயாக.
மேலான நெறியில் நின்று, நல்லொழுக்கம் வாய்ந்த தவசிகளும் தேவர்களும் உன் திருவடியைப் போற்றுகின்றனர்.

பொன்வளையல்கள் அணிந்த மான்போன்ற தேவியர் இருவரும் உன் புயத்தை அணைந்துள்ளனர்.
ஆகாயத்தை அளாவியுள்ள மயில்மீதேறி,  கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் இருந்த கிரிகளில் இருந்த அசுரர்கள்  தளர்வுற்று வருந்தும்படி போர்செய்த கூர்வேலனே!
தான்தோன்றியப்பர் என்ற திருநாமத்தையுடைய சிவபிரான்  தேவியுடன் குடிகொண்டிருந்து வாழ்ந்து தந்த நல்ல குமரனே!
தான்தோன்றியாய்  நிற்கவல்ல பெருமாளே
உனது நற்கழல்களைத் தொழும்படி என்னை ஆண்டருள்வாயாக.
குறிப்பு:
சில பாடல் பெற்ற  தலங்களில்  பெரிய கோயில்கள் இருந்தாலும், பெரும்பாலான கோயில்கள் சிறியவையே. கோயில்களின் மஹத்துவம் அவற்றின் அளவினால் வருவதில்லை. தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் என்ன மஹிமை இருக்கிறது? நமது பாடல்பெற்ற தலங்கள் மிகப் புராதனமானவை. இங்கு ரிஷிகளும் முனிவர்களும், தேவ, தேவியரும் ஆத்மார்த்தமாக வைதீக பூஜைசெய்து வந்தனர். அதனாலேயே அவற்றிற்கு மதிப்பு வந்தது. [ உ..ம். "வேதத்தின் மந்திரத்தால்  வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே " சம்பந்தர்.]

 முதலில் இவை நதிக்கரை, மரத்தடி போன்ற இடங்களில்தான் [ இயற்கை சக்தி உள்ள இடங்களில்தான் ] இருந்தன. அதனால்தான்  தீர்த்தம், தலம். ஸ்தலவிருக்ஷம் என்று வந்தது. பின்பு வந்த அரசர்கள் அங்கு பெரியதாக கோவில் எழுப்பினர். அவற்றின் புராதன மஹிமை ஸ்தல புராணங்களால் தெரியவருகிறது. இந்த விஷயங்களையே நாயன்மார்களும் அருணகிரிநாதரும் தங்கள் பாடல்களில் சொல்லியிருக்கின்றனர்.
இந்த விஷயங்களை ஸ்ரீ காஞ்சிமஹாபெரியவர்  2.12.1932ல் மாம்பலத்தில் செய்த உபன்யாசத்தில் விளக்கியிருக்கிறார்.
எல்லோரும் கிராமங்களைவிட்டு நகரத்திற்குப் படையெடுத்துவரும் இன்னாட்களில் பல புராதனக்கோயில்கள் கவனிப்பாரற்று இருக்கின்றன. அதே சமயம் நகர்ப்புரங்களில் சில உபாசகர்கள் இன்றும் வீட்டோடு [ஆடம்பரமோ, ஆரவாரமோ, விளம்பரமோ இல்லாமல் ] ஆத்மார்த்த பூஜை செய்தே வருகிறார்கள். அத்தகைய இடங்களில் தெய்வ சாந்நித்யம் இருப்பதைச் சாதகர்கள் உணர்கின்றனர்.








No comments:

Post a Comment