Wednesday, 25 January 2017

40. திருப்புகழ் 38.திருச்செங்காட்டங்குடி

40.திருப்புகழ் 38.திருச்செங்காட்டங்குடி



இது, அருணகிரிநாதர் தரிசித்த 37வது தலம்.ஸ்வாமி பெயர் உத்தராபசுபதீஶ்வரர், கணபதீஶ்வரர். அம்பாள் பெயர் சூளிகாம்பாள், திருக்குழல் நாயகி. சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்து புகழ்பெற்ற தலம். அவரால் நிறுவப்பெற்ற வாதாபிகணபதி விக்ரஹம் உள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல்கள் பெற்றது.

சம்பந்தர்

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.

[1ம் திருமுறை]

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்  தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே .


செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே.

[3ம் திருமுறை]

அப்பர்

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

[6ம் திருமுறை]


[ temple pictures: askgetthings.blogspot.in
. Thanks.]


இத்தலத்தில் ஒரே பாடல்தான் பாடியிருக்கிறார் நம் ஸ்வாமிகள். அருமையான பாடல். நமக்கு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  பாடல்.

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
     கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
          சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென          விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
     கங்காள வேணிகுரு வானவந மோநமென
          திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு        முருகோனே


இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
     பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
          யின்பான தேனிரச மார்முலைவி டாதகர         மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
     செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
          டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்        பெருமாளே.


சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
          தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்          புரிவாயே


[ வங்கார மார்பிலணி எனத் தொடங்கும் பாடல் ]

சிங்கார ரூப மயில் வாஹனா நமோ  நமோ என,
கந்தா குமரா சிவ தேசிக நமோ நமோ என
சிந்தூர பார்வதி சுதாகர  நமோ நமோ என 
வெற்றிச் சின்னங்களின் ஓசை கடல்போல முழங்க,

ஜோதி கதிர் வேலவ நமோ நமோ என,
கங்காள வேணி குருவானவ நமோ நமோ என முழங்கவும்
வலிமைமிக்க சூராதியரும், கடலும் க்ரவுஞ்ச மலையும் தூள்படவும்
கூரிய வேலைச் செலுத்தின முருகனே !

இனிமை வாய்ந்த வேதம் கற்ற  பிரம்மா விழும்படி அவனை  மோதியும்,
ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலால் தினைப்புனம் சென்று, இனிய வள்ளி நாயகியை விட்டு நீங்காத  கரதலமும்  மணிமார்பும் கொண்டவனே !

எட்டுத் தோள்கொண்ட சிவபெருமான்  ஆசையுடன் பிள்ளைக்கறியை யுண்ட திருச்செங்காட்டங்குடியைச் சேர்ந்து, ஒளிவீசும் மயில்மேல்  அழகாக வீற்றிருந்து, ஆசையாய் எழுந்த எனது பாடலாகிய மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே ! தேவர் பெருமாளே !

யோகவழியில் கிடைக்கும் தச நாதங்களை அனுபவித்து, மாயையாகிய இருள் வெந்து ஒழிந்துபோக, மூலாக்னி எழும்படி உபதேசத்தை என் குளிர்ந்தகாதில் ஓதி, உனது இரு பாதமலரை அடையும்படியான  அருளைத் தருவாயாக !


இந்தப் பாடலில் சிறுத்தொண்ட நாயனார்  பிள்ளைக்கறி சமைத்த அரிய செயலைப் போற்றுகிறார். நமோ நமோவென ஐந்து நாமங்களச் சொல்கிறார்.

இங்கே குறிப்பிடும் யோகம் சிவயோகம் என்னும் தெய்வீக நெறியாகும்; ஹடயோகமில்லை. இந்த யோகத்தில் செல்வோருக்கு, சாதனையின்  போது பத்துவித நாதங்கள் கேட்கும் என்பார்கள். அந்த நாதங்கள்:
கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கு, யாழ், தாளம்,
 குழல், பேரி, மத்தளம், முகில் என்பன.

ஆனால் இத்தகைய நாதங்களிலோ, பிற காட்சிகளிலோ சிக்கிக்கொள்ளலாகாது. சாதனையின் லக்ஷ்யம் "பாத மலர்." அதற்கே உபதேசம் வேண்டுகிறார்.

வள்ளிமலை  ஸ்வாமிகள்










திருப்புகழ் பக்தர்களுக்கு இந்தப் பாடல் முக்கியமானது. இன்று நாம் திருப்புகழை அறியவும் பயிலவும் பாடவும் காரண புருஷராக இருப்பவர் ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள் எனப்படும் ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள். 






இவர் பூர்வத்தில் அர்த்தநாரி என்ற பெயரில் மைசூர் அரண்மனையில் சமையல்காரராக இருக்கும்போது  தாங்கமுடியாத வயிற்றுவலியால் (அப்பென்டிசைடிஸ் ) கஷ்டப்பட்டார். அரண்மனை வைத்தியர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பழனி சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும்படி ஒரு மேஸ்திரி  சொல்லக் கேட்டு  பழனி வந்தார்.  [ ஈரோடுவரை ரயிலில் வந்து அங்கிருந்து நடந்தே பழனி வந்து சேர்ந்தார். ] அவர் வந்த நாள்  தைப்பூசம்: ஜனவரி 18, 1908. பழனியில்  தங்கியிருந்தபோது   அபிஷேகப் பால் மற்றும் அவர்கள் பிரசாதமாகக் கொடுத்த வாழைப்பழம் மட்டுமே உணவாக அருந்தினார். உடல் குணமடைந்தார்.

இவர் பழனியில் இருக்கும்போது  நடந்த ஒரு திருவிழாவில்  ஸ்வாமி மயில் வாஹனத்தில் வந்த சமயம்,  மதுரையிலிருந்து வந்த தேவதாசி  ஒருவர்  பாடி ஆடினார், அதில் ஒரு பாடலின் ஒர் அடி இவர் மனதைக் கவர்ந்தது. [இவருக்கு சங்கீதமோ சாஹித்யமோ தெரியாது. தமிழ் கூட எழுதவோ படிக்கவோ தெரியாது.] 




"சிங்கார ரூபமயில் வாஹனா நமோ நமோ " என்ற அந்த அடியைக் கேட்ட இவருக்கு மயிர்க்கூச்சலெடுத்தது. கண்ணீர் பெருகியது. இவர் தன்வசமிழந்தார். .  பின்னர் , அந்த பாடல் "வங்கார மார்பிலணி " எனத்தொடங்கும் திருப்புகழ் என்பதை அத் தேவதாசியிடமிருந்து அறிந்தார். புத்தகம் பதித்தவரின் விலாசம் பெற்று , புத்தகத்தை வரவழைத்தார். இவருக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாததால் எட்டு வயது பள்ளி மாணவனிடம் தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டார். சில நாட்களிலேயே முதல் பாகத்தில் இருந்த 400 பாடல்களையும்  மனப்பாடமாக்கிக்கொண்டார் ! பாடத்தெரியாததால் திருப்புகழை தனக்குத் தெரிந்தமாதிரி படிக்கத் தொடங்கினார். பின்னர் திருவண்ணாமலை வந்து, பகவான் ரமணரைத் தரிசித்தார். அவர் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகளைச் சந்தித்தார்.





 'திருப்புகழே மஹா மந்திரம். நீ வள்ளிமலைக்குப் போய் திருப்புகழ் ஓதித் தவம் செய் ' என்று சேஷாத்ரி ஸ்வாமிகள் இவருக்கு உபதேசம் செய்தார். இவர் வள்ளிமலை சென்று  12 வருஷங்கள் மலையைவிட்டுக் கீழே இறங்காமல் திருப்புகழ் மட்டுமே ஓதி வந்தார். அங்கு வள்ளியின் கருணையால், திருப்புகழை அதற்குரிய ராக தாளங்களுடன் சந்தம் பிசகாமல் பாடத் தெரிந்துகொண்டார். பின்னால் நாடு முழுதும் சுற்றியலைந்து திருப்புகழைப்  பாடிப் பரப்பினார்..






சின்னமாம் ஏக தாரை திருக்கையில் ஏந்தி இந்தச்
சென்னை மாகாணமெல்லாம் திருப்புகழ் என்னும் தேனைச்
சொன்னமா மாரிபோலச் சுவையமு தொழுகச் சொல்லும்
தன்னைநே ரில்லாச் சச்சிதானந்தன் பதங்கள் போற்றி.



ஆக, நமக்கு திருப்புகழ் தெரியக் காரணமாக இருந்தவர் வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள். இவருக்கு திருப்புகழ் தெரியக் காரணமாக இருந்தது இந்தப் பாடலே!
சிங்கார ரூப மயில் வாஹனா நமோ நமோ !






நாம் திருப்புகழுக்குள் புகுந்துவிட்டால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் !



No comments:

Post a Comment