37.திருப்புகழ் 35. அம்பர் மாகாளம்.
இது அம்பர் தலத்திற்கு அருகிலேயே உள்ள மற்றொரு தலம். அருணகிரிநாதர் தரிசித்த 34வது தலம். காளி இரு அசுரர்களைக் கொன்ற பாவம் தீர இங்கு வந்து ஈசனைப் பூஜித்ததால் "மாகாளம்" எனப் பெயர்பெற்றது. இங்கு ஸ்வாமியின் நாமம் காளகண்டேஶ்வரர், மஹாகாளேஶ்வரர் என்பது. அம்பாளின் பெயர் பக்ஷநாயகி. சோமாசிமாற நாயனார் யாகம் செய்த இடம் இதற்கும் அம்பருக்கும் இடையிலே இருக்கிற தென்பர். இதுவும் கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலாகும். மஹாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணம் பாடியிருக்கிறார்.
இத்தலத்தில் சம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடியிருக்கிறார்.
அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
[முதல் திருமுறை]
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் கருவினை யடையாவே.
[இரண்டாம் திருமுறை]
பரவின வடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுன லரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா வணங்கினோ டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.
[மூன்றாம் திருமுறை]
நாமெல்லாம் கடைத்தேற எளிய வழியைக் கற்பித்தவர் சம்பந்தர். இவர் வழியில் மந்திர-தந்திரம் போன்ற தகிடுதத்தங்கள் இல்லை. 'ஸ்வாமியைப் போற்றி பதிகம் பாடுங்கள். உங்கள் வினை போகும் -நல்லது நடக்கும்' என்பதே அவர் காட்டிய வழி- பதிகப் பெருவழி. "சடையான் கழலேத்தச் சாரா வினைதானே, தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே,பரவின அடியவர் படுதுயர் களைபவர், நம்பி நாண் மொழிபவர்க்கு இல்லையாம் வினை, நலம் பெறுவார் தாமே" என்று இப்படி ஆணித்தரமாகச் சொல்கிறார்.வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளல் மலர்த்தாள் தலை!
ardhra.orgராஜகோபுரமும் குளமும்.
இங்கு வந்த நம் ஸ்வாமிகள், இறைவன் நாமங்களை ஓத அருள் தரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறார். எவ்வளவு பொருத்தம் !
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே
பாதாளத்தில் உள்ள ஆதிசேஷனுடைய உடல். ஆயிரம் படங்களாம் மகுடங்கள், இவற்றுடன் ஏழுகடல் வெள்ளம், க்ரௌஞ்ச மலை, சூரர்களின் உடல் ஆகிய இவை எல்லாம் பாழ்பட, பொடியான அந்த தூள் விண்ணிலே போய்ப்படிய, உலகு வாழ ஒளி வேல் செலுத்தியவனே !
பாற்கடலில், பாம்பணையில் லக்ஷ்மியுடன் இருக்கும் நீல உருவத்தினன், வலிமை மிக்க ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஓடி விலக, பூமியில் அம்பைச் செலுத்திய முராரி, பஞ்சபாண்டவரின் தோழனான திருமாலின் மருகனே!
மாதா, புரத்தை எரித்தவள், சுகக்கடல், பரதேவதை, பெண் திலகம், உமை, ஆகாச சொரூபி, அழகி, ஆகிய பார்வதியின் வலது புரத்தில் உள்ள சிவன், ரிஷப வாஹனன், நடனம் புரியும் ஒரு தலைவன், மகிழும்படியான ஞானப்பொருளை அவருக்கு அருளின குரு மூர்த்தியே !
தேவேந்த்ரன் வளர்த்த மயில்போன்ற தேவ சேனையுடன் குறமாது வள்ளியை மணந்த மணவாளனே! குஹனே ! குமரனே!சிறந்த மயிலின் மீது திருமாகாள மஹா நகரில் அடியார்கள் ஆசையுடன் பரவி வழிபடும் பெருமாளே !
நான் யார், நீ எவன் என்று என்னைப் புறக்கணிக்காமல், என் உயிரை வசீகரிக்கும் உனது திருவடித் த்யானமே எனக்கு ஒரே நினைவாய் அமையவும், உன்னை தினமும் 'நாதா, குமார, முருகா ' என்று ஓதவும் அருள் தருவாயாக !
ராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் இணைத்து திருமாலின் பெருமையைச் சொன்னார். அம்பிகையின் பெருமையை அழகான நாமங்களினாலே சொன்னார். சிவனுக்கு உபதேசித்த குருமூர்த்தி என்று சொன்னார். "நாதா, குமரா. நம " என்று வணங்கி சிவபெருமான் முருகனிடம் பாடம் கேட்டாரம். இதைக் கந்தரனுபூதியில் சொல்கிறார்:
நாதா குமரா நம வென்றரனார்
ஓதாயென ஓதியதெப் பொருள்தான்.
"நாதா, குமரா, நம: " என்பது மந்திரம். இதையே தினம் ஓதவேண்டும் என்கிறார்.
நம் தகுதியைப் பார்த்து இறைவன் அருள்செய்வதானால், நம்மில் யாரும் இந்தப் பரீக்ஷையில் தேறமுடியாது ! அதனால், " நான், நீ என்று பார்க்காதே" என்கிறார். நம் எல்லோருக்கும் Grace Mark போடவேண்டும்! எல்லோரும் பாஸ் !
இப்படி ஒர் அருமையான பாடல்.
No comments:
Post a Comment