Monday, 30 January 2017

47. இரு அரிய அவதாரங்கள் -1


47. இரு அரிய அவதாரங்கள் -1


சம்பந்தரும் பழனியும். படம்  நன்றி :தமிழ் ஹிந்து

அவதார தத்துவம்


அவதாரம் என்னும் கொள்கை ஹிந்து மதத்தின் ஜீவனாக இருப்பது. கடவுள் என்ற ஒன்று அல்லது ஒருவர் என்றோ உலகைப் படைத்து எங்கோ இருக்கிறார் என்று இல்லாமல், உலக வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவர், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர், அவர்களுக்காக அவர்களாக அவர்களோடு வந்து வாழ்பவர் என்ற கருத்து அவதாரத் தத்துவத்தின் மையமாக இருப்பது. இதை ஸ்ரீமத் பதவத் கீதை தெளிவாகச் சொல்கிறது.

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।

अभ्युत्थानमधर्मस्य तदाऽऽत्मानं सृजाम्यहम्।।4.7।।


परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।

धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।




யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய  யதா ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய  ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபனார்த்தாய  ஸம்பவாமி யுகே யுகே


பாரத குலத்தோன்றலே ! எப்போதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் நான் என்னைத் தோற்றுவித்துக் கொள்கிறேன். [அதாவது, மக்கள் முன்னே காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகின்றேன்.]


ஸாதுக்களைக் கடைத்தேற்றுவதற்காகவும், பாவச்செயல்களைச் செய்பவர்களை அழிப்பதற்காகவும்  தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த ஶ்லோகங்களில் அவதாரத்தின் அவசியமும் அதன்   நோக்கமும் பயனும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பாவத்தை ஒழித்தால் போதாதா, பாவம் செய்பவர்களையும் அழிக்கவேண்டுமா என்றால், சில சமயங்களில் பாவம் செய்பவர்கள் அழியாமல் பாவம் மறைவதில்லை. நமது இரு இதிஹாசங்களும் இதையே விளக்குகின்றன.

அவதாரம் என்றால் இறங்கி வருவது. பகவான் நமது  உலகத்திற்கு, அதாவது நமது நிலைக்கு இறங்கி வருகிறார். நமது மொழியில் பேசுகிறார். இது அவருடைய கருணை.

பொதுவாக அவதாரம் என்றால் விஷ்ணுவின் பத்து அவதாரங்களே பிரதானமாக எண்ணப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் முக்கியமாக 24 அவதாரங்களைச் சொன்னாலும் அவதாரங்கள் கணக்கற்றவை என்கிறது. ராமர் க்ருஷ்ணர் ஆகிய இரு அவதாரங்களும் ப்ரதானமானவை. நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் போற்றப்படுபவை. இவை இரண்டும் பகவான் மனிதனாகப் பிறந்து வளர்ந்த வரலாறுகள்.  ஸ்ரீ நாரசிம்ஹ அவதாரம் அப்போதைக்கு ஆவிர்பவித்தது. நரசிம்ம அவதாரமும் சில பகுதிகளில் விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது.. பல குடும்பங்களுக்கு  குல தெய்வமாக  இருக்கிறது.  

பொதுவாக சிவன் அவதாரம் எடுத்ததாகச் சொல்வதில்லை. " பிறவா யாக்கைப் பெரியோன் " என்பார்கள். அதாவது, மனிதனாகப் பிறவி எடுக்கவில்லை. ஆனால் சிவனும் மனித உருவில் தோன்றியே இருக்கிறார். இதைத் திருவிளையாடல் புராணத்தில் பார்க்கிறோம். அவரும் மக்கள் முன்பு காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறார்.

ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணம் பற்றி எழுந்ததே. தேவர்கள் கோரிக்கைக்கு இணங்கி ராவண வதம் செய்ய நிகழ்ந்தது ராமாவதாரம். தீய அரசர்களை நீக்கி, உண்மையான க்ஷத்ரிய தர்மம் தழைக்க வழி வகுத்தது க்ருஷ்ணாவதாரம். அதனால் பூபாரமும் குறைந்தது.

இதற்கெல்லாம் ஆதாரமாக, இதன் பின்னணியில் ஒர் அவதாரம் இருக்கிறது. அதைப் பொதுவாக நாம் நினைப்பதில்லை.


வேள்வியில் நிலைபெற்ற தர்மம்

படைப்பு -ஶ்ருஷ்டி என்பது  பரப்ரஹ்மத்தின்   பன்முக வெளிப்பாடு. ஒன்றேயான பொருள் பலவிதமாக வெளிப்படுகிறது. எண்ணிறந்த சக்திகள் ஒன்றுசேர்ந்து உலக இயக்கத்தை குழப்பமில்லாமல் நடத்திச் செல்கின்றன. இச்சக்திகளை தேவர்கள் என்கிறோம். இந்த்ரன் தேவக்கூட்டத்தின் தலைவனாகக் கருதப்படுக்கிறான். இந்த்ரன் என்பது ஒரு பதவி, குறிப்பிட்ட நபர் அல்ல. இவர்கள் உயிர்களைப் போஷிக்கிறார்கள்.கடவுளால் நியமிக்கப்பட்ட தொழில்களைச் செய்கிறார்கள். ஆகவே இவர்களைப் போற்றவேண்டியது நமது கடமை. இப்படிப் போற்றும் முறையே வேள்வி- யஜ்ஞம், யாகம் என்கிறோம். [பொதுவாக மக்களுக்குரிய யஜ்ஞங்கள் ஐந்தெனப்படும் ] இவ்வாறு பரஸ்பரம் போற்றி வாழ்வதே தர்மம். இதையே வேதம் வகுத்துச் சொல்கிறது. இதையும் ஸ்ரீமத் பகவத் கீதை எளிதாக விளக்குகிறது.


सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।

अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्।।3.10।।




 ஸஹயஜ்ஞா: பரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி :
அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஅஸ்த்விஷ்ட காமதுக்.


கல்பத்தின் ஆரம்பத்தில் ப்ரஜைகளின் தலைவரான ப்ரஜாபதி யாகங்களுடன் மக்களைப் படைத்துவிட்டுக் கூறினார் : " நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெருகுங்கள்.இந்த வேள்வி நீங்கள் விரும்பிய போகத்தைத் தருவதாக ஆகட்டும். "


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।

परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ।।3.11।।


தேவான் பாவயதானேன  தே தேவா பாவயன்துவ :
பரஸ்பரம் பாவயந்த: ஶ்ரேய : பரமவாப்ஸ்யத


இந்த வேள்வியால் தேவர்களை வளரச்செய்யுங்கள்.  அந்தத் தேவர்கள் உங்களை வளரச்செய்யட்டும். இப்படித் தன்னலம் கருதாது பரஸ்பரம் ஒருவரை யொருவர் வளரச் செய்து நீங்கள் மேலான நன்மையை அடையுங்கள்.


इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।

तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः।।3.12।।



இஷ்டான் போகான் ஹி வோ தேவா  தாஸ்யன்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தானப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ :


வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்கு விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட பொருள்களை  அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.


अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।



அன்னாத் பவன்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ :
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:



அனைத்து உயிரினங்களும் அன்னத்திலிருந்து உண்டாகின்றன.அன்னம் மழையிலிருந்து  உற்பத்தியாகிறது.மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது.வேள்வி [யஜ்ஞம் ] விதிக்கப்பட்ட கர்மாவிலிருந்து உண்டாகிறது. 


कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।

तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्।।3.15।।




கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி பரஹ்ம அக்ஷரம் ஸமுத்பவம்
தஸ்மாத்  ஸர்வகதம் பரஹ்ம நித்யம் யஜ்ஞோ ப்ரதிஷ்டிதம்.


கர்மங்கள் வேதத்திலிருந்து உண்டாகின்றன. வேதம்  அழிவற்ற பரம்பொருளிடமிருந்து தோன்றியது எனத் தெரிந்துகொள். எனவே, எங்கும் நிறைந்த  அழிவற்ற பரம்பொருள்  வேள்வியில் எப்பொழுதும்  நிலைபெற்றிருக்கிறார்.

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।

अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति।।3.16।।



ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்  நானுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ  மோகம் பார்த்த ஸ ஜீவதி


பார்த்தா ! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கிவைக்கப்பட்ட படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாகப் பின்பற்றி நடக்கவில்லையோ  , புலன்களின் மூலம் போக வாழ்க்கையில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை யுடையவன் வீணில் வாழ்கிறான்.


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।

तदर्थं कर्म कौन्तेय मुक्तसंगः समाचर।।3.9।।


யஜ்ஞார்தாத் கர்மணோ அன்யத்ர  லோகோயம் கர்மபந்தன:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த ஸங்க: ஸமாசர


யஜ்ஞத்தின்  பொருட்டுச் செய்யப்படுகிற கர்மம் தவிர, வேறு கர்மங்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது.
ஆகையால் அர்ஜுனா, பற்றுதல் இல்லாமல் அந்த வேள்வியின் பொருட்டே கர்மத்தை ஆற்றுவாயக.

[குறிப்பு:  இது முக்கியமான எச்சரிக்கை. வேள்வியினால் எதையும் அடையலாம் என்று, ஆசை வயப்பட்டு வேள்வி செய்வது மீண்டும் மீண்டும் பிறவித் தளையில் ஆழ்த்திவிடும். செய்யவேண்டிய கர்மத்தை மட்டும்  பற்றில்லாமல் கடமையெனக்கருதியே செய்யவேண்டும். ஆசை வசப்பட்டுச் செய்யும் = காம்ய கர்மம் நீக்கவேண்டும் என்பது கீதையின் முக்கிய உபதேசம். ] 


இப்படி தர்மத்தின் ஆணிவேராக, ஆதாரமாக இருப்பது யஜ்ஞ கர்மங்கள். இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது வேதம். இந்தக் கர்மங்கள் ஒழுங்காக நடைபெறாமல் தடைசெய்பவர்கள் அசுரர்கள், ராக்ஷஸர்கள். இவர்கள் தேவர்களின் இடத்தை ஆக்ரமிக்க முயல்கிறார்கள். யஜ்ஞத்தின் பயன் தேவர்களை அடையாமல் செய்ய முயல்கிறார்கள். சில சமயம் ஒரளவு வெற்றியும் காண்கிறார்கள்.[இவர்கள் கொடிய, நெடிய தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர்கள். ]  இவர்கள் தொல்லை அதிகரிக்கும்போது, மனித முயற்சியால் அதைச் சமாளிக்க முடியாதபோது, தேவர்களும் ரிஷி-முனிவர்களும் தெய்வத்தை வேண்டுகிறார்கள். அவர்களுக்கு இரங்கி பகவான் அவதாரம் எடுக்கிறார்.

நமது சம்ப்ரதாயத்தில் இந்த அவதாரம் எடுப்பது பரிபாலனக் கடவுளாகிய திருமாலுக்கு என்று கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு அவதாரத்தின் போதும் எல்லா தெய்வங்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். சிவபெருமான் அவதாரமெடுக்காமலேயே முப்புரத்தையும் எரித்தார்.

ஸுப்ரஹ்மண்யர் அவதாரம்


திருச்செந்தூர்- சூர ஸம்ஹாரம்



மும்மூர்த்திகளாலும் முடியாத ஒரு சூழ்நிலையை சூரபத்மன் தோற்றுவித்தான். அவன் இந்த்ரனை தேவருலகிலிருந்து வெளியே தள்ளி, தேவர்களைச் சிறையிலிட்டான்.  [அதாவது யாக-யஜ்ஞங்கள் சரியாக நடக்காமலும், அவற்றின் பலன் தேவர்களை அடையாமலும், தன்னையே அடையுமாறும் செய்தான்.] அப்போது சிவன்-சக்தி சேர்ந்த அவதாரமாக நிகழ்ந்தது ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம். சுப்ரஹ்மண்யர் தேவர்களை மீண்டும் அவர்கள் இடத்தில் நிலைபெறச் செய்தார் என்பதன் பொருள், மீண்டும் யஜ்ஞங்கள் தடையின்றி நடக்க வழிசெய்தார் என்பதேயாகும்.
ப்ரஹ்மண்யத்தை மீண்டும் ஓங்கச்செய்தார். அதனால் அவர்  "ஸுப்ரஹ்மண்ய " ரானார். இவர்  நாமத்தை வேதம் மும்முறை ஓதுகிறது:

ஸுப்ரஹ்மண்யோம்  ஸுப்ரஹ்மண்யோம் ஸுப்ரஹ்மண்யோம் .


திருமுருகாற்றுப்படை

முதல் சங்க நூலாகிய திருமுருகாற்றுப்படை முருகனின் அவதார ரகசியத்தைத்   தெரிவிக்கிறது.

பார்முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்......
இருபேருருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மருவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேள் சேஎய்.

[பாரினும் முதிர்ந்த , குளிர்ந்த கடலானது கலங்கும் படியாக அதனுள்ளே புகுந்து,சூரனாகிய அசுரர் தலைவனைக் கொன்ற சுடர்விடுவதாகிய  இலையை  உடைய நெடிய வேலினாலே....
இரண்டு பெரிய உருவையுடைய ஒரு பெரிய சூரனது உடம்பானதுஅஞ்சும்படியாக, ஆறு வேறு உருவத்தோடு சென்று , அசுரர்களது நல்ல வெற்றி கெட்டுப்போகுமாறு, தலைகீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களுடைய மாமரத்தை அழித்த குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய நல்ல புகழையுமுடைய செவ்வேள் சேய்.]

இப்படிப்பட்ட முருகனின் ஆறு திருமுகங்களில் ஒன்று, அந்தணர்கள் செய்யும் யாகத்தைக் காக்கிறது.

................... ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே

வேத மன்த்ர விதியின் படியே, சம்ப்ரதாயத்தினின்று வழுவாது, அந்தணர் புரியும் யஜ்ஞங்களை நன்கு  நிறைவேற்றத்  திருவுள்ளம்  கொள்ளும் ஒருமுகம்.

[இதையே அருணகிரிநாதர் "யாகமுனிவர்க்குரிய காவற் காரனும் " , " அந்தண் மறை வேள்வி காவற்கார " , "விப்ரகுல யாகச் சபாபதியும் " என்றெல்லாம் பலவாறு சொல்வார்.]

முருகனது ஆறு திருமுகங்களுக்கேற்ப பன்னிரு கரங்களும் தக்க தொழில்களைச் செய்கின்றன. யாகத்தைக் காப்பது ஒருமுகம்; அதற்குத் தகுந்தபடி இரு கரங்கள் யாகத்தைக் கெடுப்போரை அடுக்கத் தயாராக இருக்கின்றன.

.............இரு கை
ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப

இரண்டு கரங்கள் வியப்பையும் கருமையையும் உடைய கேடயத்தையும் வேலாயுதத்தையும் சுழற்றுகின்றன.

இப்படிப்பட்ட முருகன் அந்தணர்களின் செல்வமாக இருக்கிறான் : "அந்தணர் வெறுக்கை ".

இந்த நிலையில் அந்தணர்கள் சும்மா இருப்பார்களா ? தங்கள் நன்றியை வழிபாட்டினாலே தெரிவிக்கிறார்கள். நக்கீரர் பாடலில் ஆறு தலங்களில் ஒரு தலம் முழுமையும் ( திருவேரகம் ) அந்தணர் வழிபாடு பற்றியதே !

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கிரட்டி இளமை நல்லியாண்டு 
ஆறினிற் கழிப்பிய அரன் நவில் கொள்கை
மூறு வகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.

[ ஆறு தொழில்கள் என்று வகுக்கப்பட்ட இலக்கணத்திலிருந்து வழுவாமல்,
தந்தை, தாய் ஆகிய இரு வழியிலும்  பல்வேறு பழைய {தொல்- புராதன ) கோத்திரத்தை உடையவர்களும்,
இளமைப் பருவத்துக்குரிய  நாற்பத்தெட்டு நல்ல ஆண்டுகளை நிற்கவேண்டிய  நெறியிலே நின்று கழித்தவர்களும், 
தர்மத்தையே நவிலும்  விரதத்தை உடையவர்களும்,
முத்தீ எனச் சொல்லப்பட்ட மூவகை வேள்வித்தீயையே செல்வமாக உடையவர்களும், இருபிறப்பாளர்களுமாகிய அந்தணர்கள், 
முருகனைத்துதிப்பதற்கான தகுந்த சமயம் (முஹூர்த்தம்) அறிந்து ஸ்தோத்திரங்கள் கூறவும்,
ஓன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து,
உலராத ஈர  ஆடையை அப்படியே உலருமாறு அணிந்து,
தலைமேலே கைகளைக்குவித்து முருகனைப் புகழ்பவர்களாய்,
ஆறெழுத்துக்களைத் தன்பால் கொண்டதாகிய  அரிய உபதேச  மந்திரத்தை நாக்கானது  புரளும் மாத்திரத்திலேயே பலமுறை கூறி,
மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடவும், அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே எழுந்தருளி யிருப்பவன்.]



திருவேரகத்திறைவன். ஸ்வாமிமலை

பெயரில் அவதாரச் சிறப்பு


முருகனுடைய அவதாரச் சிறப்பு அவனுக்கு வழங்கும் பெயர்களிலேயே  விளங்குகிறது!

கார்த்திகேயன்:
ஹிமய மலைச் சாரலில், சரவணப் பொய்கையில், அக்னி ஏந்திவர, கார்த்திகை மாதரால் தாங்கப் பெற்றவன். ஆறு ரிஷிகளின் பத்னிகள் பெற்றெடுத்த ஆறு திரு உருவங்களோடு அமர்ந்த செல்வன்

நெடும்பெருஞ்சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ

சிவ குமாரன் : ஆல்கெழு கடவுள் புதல்வ
பார்வதி நந்தனன் : மலைமகள் மகனே
துர்கையின் புதல்வன் : வெற்றிவெல் போர்க்கொற்றவை சிறுவ
பராசக்தியின் குழந்தை :இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி
தேவ சேனாபதி : வானோர் வணங்குவில் தானைத் தலைவ
அந்தணர்களுடைய செல்வம் : அந்தணர் வெறுக்கை
க்ரவுஞ்ச ஸம்ஹாரன் :
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பெரிய கடவுள் :பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூரனை அழித்தவன் : சூர் மருங்கு அருத்த மொய்ம்பின் மதவலி


இவ்வாறு பெயரிலேயே தன் வரலாற்றைத் தெளிவு படுத்தும் பெரிய தெய்வம் முருகன். இதுவே வைதீக மரபைக்காக்க வந்த முதல் அவதாரம். இதை அருணகிரிநாதர் விடாமல் வியந்து பாடுகிறார்.

குறிப்பு:
இங்கு ஸம்ஸ்க்ருதத்தில் கொடுக்கப்பட்டுள்ள கீதையின் மூல ஶ்லோகங்கள்  'gitasupersite' என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தமிழர்த்தம் ஜயதயால் கோயந்தகா  அவர்களின் கீதா ப்ரஸ் உரையைத் தழுவியது. திருமுருகாற்றுபடை உரை வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களின் உரையைத் தழுவியது. 


























No comments:

Post a Comment